டெங்கு விழிப்புணர்வு :

டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும்.
டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது
இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.
பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது.
டெங்குவின் அறிகுறிகள்:
----------------------------------------------
1.கடுமையான காய்ச்சல்
2.வயிற்றுவலி
3.தாங்க முடியாத அளவு தலைவலி
4.உடல்வலி
5.மூட்டுவலி
6.கண்ணுக்குப் பின்புறம் வலி
7. தொடர்ச்சியான வாந்தி
8. களைப்பு
9.எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது( இந்த நோயின் முக்கிய அறிகுறி)
10. உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால் ஆபத்து அதிகம்.
டெங்குவில் மூன்று வகை:
-----------------------------------------------
1 .சாதாரண டெங்கு ஜூரம்
(dengue fever)
2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்(  dengue hemorrhagic fever) :
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம்
(DENGUE Shock Syndrome):
பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.
இதில் முதல் வகை(DENGUE Fever) வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும்.
இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது.
இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை
( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்
அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்
#டெங்குவிற்கு ரத்த பரிசோதனை:
ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.
#தட்டணுக்கள் (platelet) பரிசோதனை:
( சரியான அளவு: 1.5 முதல் 4 லட்சம்/டெ.லி.  வரை)
டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
# டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.
டெங்குவிற்கான சிகிச்சை முறை:
-------------------------------------------------------------
• டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். 
"ஓ ஆர் எஸ் "(ORS) உப்பு சர்க்கரை கரைசல், இளநீர், கஞ்சி, பழரசங்கள், நீர்மோர் போன்றவற்றை அதிகமாக பருக வேண்டும்.
• வாய்வழியே பருக இயலாதவர்களுக்கு, இரத்த நாளங்கள் வழியாக (IV fluid) திரவங்கள் ஏற்றப்படும்.
• காய்ச்சலை குறைக்க பாராசிடமால் (paracetamol) மாத்திரை போதுமானது.
• குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்
• டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக்( Antibiotic) மருந்துகள் அவசியம் இல்லை.
• மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.
• காய்ச்சல் ஏற்படின் பொதுமக்கள் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
• போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தகூடும்.
• காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும்.
( சுத்தமான பப்பாளி இலை சாரும் தட்டணுக்களின் எண்ணிக்கையை கூட்ட வல்லது)
• மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?
-----------------------------------------------------------------
மிக மிக எளிது....!!!
டெங்குவை பரப்பும் ஏடிஸ்(Aedes) கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது.
ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள்  எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க
தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள்
தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.
ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது. 
நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும்.
கடைசியாக.....
#தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும்.
#மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும்,சமையல் செய்யும் முன்னும்... கட்டாயம் கைகளை வழலை(soap) கொண்டு கழுவ வேண்டும்.
இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல நோய் தொற்றுகள் (Infections) நமக்கு வருவதை தவிர்க்கலாம்.
டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை  வருமுன் தடுப்பது மிக நல்லது....
கொசுக்களை ஒழிப்போம்...!
டெங்குவை தடுப்போம்....!!
நோயில்லாமல் வாழ்வோம்...!!!
                 ---பொது சுகாதாரம் (ம)
      நோய் தடுப்பு மருந்து துறை..

Comments